
சில படங்களில் வில்லனாக நடித்திருந்ததை தவிர மற்ற படங்களில் இயல்பாக டெல்லி கணேஷ் எப்படி நடித்தாரோ அப்படியேதான் இயல்பிலும் வாழ்ந்தார்.
காலையில் எழுந்து இயல்பாக வேலைக்கு செல்லும் ஒரு மனிதரைப்போல மனைவி செய்து தரும் உணவை டிபன் கேரியரில் எடுத்துக்கொண்டு படப்பிடிப்புக்கு செல்வார்.
தினமும் ஏதாவது ஒரு கம்பெனியின் கார் அவர் வீட்டு வாசல் முன் நிற்கும். படப்பிடிப்பு முடிந்ததும் நேராக வீட்டுக்கு வந்து விடுவார்.
ஒரு வேளை கார் இல்லாவிட்டாலோ, தாமதமானாலோ தன் காரில் படப்பிடிப்புக்கு சென்று விடுவார்.
அது என்ன படம், சினிமாவா, தொலைக்காட்சி தொடரா, வெப் தொடரா, விளம்பரமா, நாடகமா, யார் நடிக்கிறார்கள் எதைப் பற்றியும் பெரிதாக தெரிந்து வைத்துக் கொள்ள மாட்டார்.
இறங்கியவுடன் மேக்அப் போடுவார்கள் அப்போதே அன்றைக்கு எந்த காட்சி எப்படி நடிக்க வேண்டும், வசனம் எல்லாவற்றையும் கேட்டுக் கொள்வார். மேக்கப் முடியும்போது அந்த கேரக்டராக மாறி இருப்பார். மற்ற நடிகர்கள் சொதப்பி எத்தனை டேக் போனாலும் முகம் சுழிக்காமல் நடித்து விட்டு வருவார். காலம் முழுக்க அவர் ‘ஒன் டேக்’ நடிகராகவே இருந்தார்.
அவருக்கும், எனக்கும் இருந்த சின்ன நட்பு வெளி உலகம் அறியாதது. பார்க்கும்போதெல்லாம் “என்ன பாய் இன்னிக்கு வீட்டுல என்ன பிரியாணி, சிக்கனா, மட்டனா” என்பார்.
அப்போது ‘தினகரனில்’ திரைத்துறையில் இருக்கும் அப்பா -மகன், அம்மா -மகள் ஆகியோரை சந்திக்க வைத்து அவர்களுக்குள் ஒரு உரையாடலை நிகழ்த்தி அதை செய்தி கட்டுரையாக வெளியிட்டு வந்தோம். அப்போது அவர் மகன் மகா (மகாதேவன்) சினிமாவில் ‘என்னுள் ஆயிரம்’ என்ற படத்தில் அறிமுகமாகி இருந்தார். மகனை அமெரிக்காவில் படிக்க வைத்த அவர் மகனுக்குள் இருக்கும் சினிமா ஆசையை மதித்து சினிமாவிலும் அறிமுகப்படுத்தினார்.
ஆனால் மகன் வெளிநாட்டில் படித்து பெரிய உத்யோகத்தில் இருக்க வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது. என்றாலும் மகன் ஆசையை நிறைவேற்றுவது ஒரு தந்தையின் கனவு என்பதால் மகனுக்காக சொந்தமாக படம் எடுத்தார்.
இந்த நிலையில்தான் அந்த பேட்டி நிகழ்ந்தது. அமெரிக்காவில் படித்த மகனுக்கு அவ்வளவாக பேட்டி கைவரவில்லை. அவனுக்கும் சேர்த்து அவரே பேசிக் கொண்டார். பேட்டி முடிந்ததும் மகன் எழுந்து வேகமாக காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டார். ஆனால் டெல்லி கணேஷ் என்னோடு நிறைய நேரம் தனிப்பட்ட விஷயங்களை பேசினார்.
“பார்த்தீங்களா பாய்… நீங்க பத்திரிகைகாராக இருந்தாலும் என் வீட்டு விருந்தாளி பாருங்க ஓடிப்போயிட்டான். இதுதான் இந்த ஜெனரேஷன் கேரக்டர். அமெரிக்காவுலபோயி இதத்தான் படிச்சிட்டு வந்திருக்கான்” என்றார்.
கொஞ்சம் வெயிட் பண்ணி வேற தயாரிப்பாளர் மூலமாக அறிமுகப்படுத்தலாமே… நீங்களே தயாரிக்கிறீங்களே… என்ற எனது ஆதங்கத்தை சொன்னேன்…
“பொறுமையும், திறமையும் இருந்தா என் பெயரை யூஸ் பண்ணாமலே அவன் நடிகனாகியிருப்பானே… சீக்கிரமே ஆகணும்னு அடம்புடிக்கிறான். பெத்த புள்ள ஒரு விஷயத்தை ரொம்ப ஆசைப்படுறான். கடவுகள் நம்ம கையில பணத்தையும் கொடுத்திருக்காரு புள்ளைக்கு செய்யாம யாருக்கு செய்யப்போறோம்…”
“பாய் உங்க சம்பளம் எவ்வளவு?” என்றார் “மாசம் 30 ஆயிரம்” என்றேன்.
“உங்க மகனுக்கு மகளுக்கு கடைசியாக என் கிப்ட் வாங்கி கொடுத்தீங்க… எவ்வளவுக்கு வாங்கி கொடுத்தீங்க?” என்றார்.
‘மகளுக்கு ஸ்கூட்டர் வாங்கி கொடுத்தேன் 60 ஆயிரம் ரூபாய்’ என்றேன்.
“எனக்கு ஒரு நாளைக்கு 30 ஆயிரம் சம்பளம். நான் மகனுக்கு மூணு கோடியில ஒரு கிப்ட் வாங்கி கொடுக்கிறேன். கூட்டி கழிச்சி பாருங்க கணக்கு சரியா வரும்” என்றார்.










