Sunday, July 26

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ட்ரெயின்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘Train’. ரயிலில் ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு ‘டார்க் த்ரில்லர்’ ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில், விஜய் சேதுபதியுடன் இணைந்து ஸ்ருதி ஹாசன், நாசர், நரேன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சத்தியம் சினிமாஸில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

 

 அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “இவ்வளவு நேரம் பொறுமையாகக் காத்திருந்து, எங்களையும் இந்தத் திரைப்படத்தையும் வாழ்த்திய அனைத்து ரசிகர்களுக்கும், தூரத்திலிருந்து வந்திருந்த மக்களுக்கும் நன்றி.

இயக்குநர் மிஷ்கின் நான் சம்பாதித்த அன்பைவிடவும் அதிகம் சம்பாதித்திருக்கிறார். நான் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக இவர் படத்துக்கு ஆடிஷன்களுக்குச் சென்றிருக்கிறேன். ஹீரோவான பிறகு இவர் ஒருமுறை என்னை ஒரு படத்துக்கு அழைத்தார். `இவரைப் பார்த்தால் சைக்கோ மாதிரி இருக்கும், எதற்கு வம்பு’ என்று பயந்து, நேராகச் சென்று ‘டேட் இல்லை’ என்று சொல்லி மறுத்துவிட்டேன். ஆனால், பின்னர் வெளியான ‘சைக்கோ’ படம் பார்த்துக் கவர்ந்தவுடன், அவரை தொலைபேசியில் அழைத்து பேசினேன். மிஷ்கினை நேரில் சந்தித்து சுமார் 8 மணி நேரம் பேசி அந்தப் படம் குறித்து பேசினோம். அப்போதுதான் ஒரு கைக்கடிகாரத்தையும் அன்பளிப்பாக கொடுத்தார்.

இப்படி தொடங்கிய நட்பு ‘பிசாசு 2’ மற்றும் தற்போது Train படம் வரை தொடர்ந்துள்ளது. ‘ட்ரெயின்’ படத்தின் படப்பிடிப்பு தளம் எப்போதும் கலகலப்பாகவும், எனர்ஜி நிறைந்ததாகவும் இருந்தது. தினமும் சிறப்பாக நடிக்கும் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட்டுக்கு 1,000 ரூபாயும், சிறப்பாக வேலை செய்யும் ஒரு டெக்னிஷியனுக்கு 1,000 ரூபாயும் பரிசாக வழங்கினார்.

பணத்திற்காக அல்ல, இவரிடமிருந்து பாராட்டை, அங்கீகாரத்தை பெறுவதற்காக எல்லோரும் கடுமையாக உழைத்தார்கள். இதனால் ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு தளம் ஒரு திருவிழா மேடை போல உற்சாகமாக இருந்தது.

படப்பிடிப்பில் ஒவ்வொரு காட்சியும் முடிந்ததும் நன்றாக இருந்தால் அனைவரும் கைதட்டிப் பாராட்டுவார்கள். இயக்குநர் மிஷ்கின் தன்னைச் சுற்றியுள்ள அனைவரையும் கவனித்து, அன்போடு நடத்துபவர். தனக்குத் தெரிந்த அறிவையும் அன்பையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு நல்ல மனிதர். மக்களுக்கு இப்படம் ஒரு ‘த்ரில்லர்’ படமாக இருக்கலாம், ஆனால் படப்பிடிப்பில் எங்களுக்கு இது ஒரு ‘ரொமாண்டிக்’ பயணமாக, மிகச் சிறந்த அனுபவமாக அமைந்தது. தயாரிப்பாளர் தாணு சார் ஆகஸ்டில் இந்தப் படத்தைக் கொண்டுவருவதாக கூறியதற்கு நன்றி.” எனக் குறிப்பிட்டார்.

படத்தின் இயக்குநர் மிஷ்கின், “நந்தலாலா கதை சொல்லும் போது தாணு சார் மீட் பண்ணினேன். ஆனா சாருக்கு கதை ஒண்ணுமே புரியல. ஆனால் விக்ரமுக்கு அந்தக் கதை ரொம்ப பிடிச்சது. பட் எங்களால் அப்பொழுது ஒண்ணா சேர்ந்து படம் பண்ண முடியல. அது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. அதற்குப் பிறகுதான் தாணு சாரை மீட் பண்ணி ஒரு கதை பண்ணலாம்னு சொன்னேன்.

அவர் விஜய் சேதுபதி வைத்து பண்ணலாமுன்னு சொன்னார். விஜய் சேதுபதி என்கூட ரெண்டு நாள் வொர்க் பண்ணி இருக்காரு. பத்து வருடத்திற்கு முன்னாடி நான் அவருக்கு நோ சொன்னேன். அதுக்கப்புறம் பெரிய நடிகராக வளர்ந்துட்டாரு. என்னுடைய சைக்கோ படம் பாத்துட்டு என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் விஜய் சேதுபதி

அவரை மிக சிறந்த மனிதனாக நான் பார்த்தேன். இந்தக் கதையை எழுதும் போது விஜய் சேதுபதிக்காக நான் பார்த்து பார்த்து எழுதினேன். இந்தப் படத்தை விஜய் சேதுபதி தவிர வேறு யாராலும் பண்ணி இருக்கவே முடியாது. கமல் சார் கூட பண்ணிருக்க முடியாது. விஜய் சேதுபதி ஒரு எரிமலை மாதிரி. என்னோட படத்தை பத்தி நான் பெருமையா பேசல. படம் நல்லா இல்லைனா என்னை செருப்ப கழட்டி அடிங்க

விஜய் சேதுபதி நடிப்பை என்னால மறக்கவே முடியாது எல்லாமே முதல் டேக் ஓகே பண்ணிட்டாரு. ஒரு காட்சி ஒரு டைம் சொன்னாலே அதை புரிஞ்சு மனசுல இருந்து நடிச்சு முடிச்சுருவாரு. நான் நாசர் நரேன் கூட ஒர்க் பண்ணி இருக்கேன். ஆனால் விஜய் சேதுபதி நடிக்க வைத்தது எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். நான் பெருமைப்படுகிறேன்

தாணு சார்க்கும் ரொம்ப நன்றி. உங்க மேல மிகப்பெரிய நம்பிக்கை இருக்கு. பிசாசு 2 தயாரிப்பாளருக்கும் என்னுடைய நன்றி. அந்தப் படம் வரும் அதுக்காக நான் காத்திருப்பேன். சினிமா அப்படித்தான் இருக்கும்.” என்றார்.

 

Related posts: